புதுமைப்பித்தன் இப்படிச் சொல்லலாம்தான். தன் எழுத்துக்களின் மீது அவ்வளவு நம்பிக்கையும், மரியாதையும் அவருக்கு இருந்திருக்கிறது!.
விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல. நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.
விமர்சனம் செய்கிறவர்களும், விமர்சனம் செய்யப்படுகிறவர்களும் இதுகுறித்து யோசிக்க வேண்டும்தான்.
இந்தமுறை வாடாத பக்கங்களுக்கு பல நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
எஸ் வி வேணுகோபாலன்:
இதெல்லாம் நமது வேலையில்லை என்று பொதுவான மனிதர்கள் கை கழுவிவிட்டு நகர்ந்து விடுகிற, இதையெல்லாம் சொல்ல மனிதர்கள் இருக்கின்றார்களா என்று வாசிப்பவர்கள் உற்சாகமும், ஆறுதலும் கொள்கிற வலைப்பூக்கள் வணக்கத்திற்குரியவை. புதுவை எஸ் ராம்கோபால் என்ற அன்பரின் வலைப்பூ அம்மாதிரியான ஒன்று. பாசிஸ்ட் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படுகிறோம் என்று அறியாத ஏராளமான குழந்தைகள் மேற்கொள்ளும் இறுதிப் பயணத்தில் உண்மை தெரிந்தாலும் அவர்களை கலவரப்படுத்தாமல் அன்பு மழை பெய்து உடன் செல்லும் ஜானூஸ் கோர்சாக் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும். குழந்தைகளது உளவியல் குறித்த தேர்ச்சியான அந்த மனிதரது ஒரு சில வரிகள் இங்கே, மற்றவை வலைப்பூவில்.
குழந்தைகள் நாளைய மனிதர்கள் அல்ல; மாறாக அவர்கள் இன்றையவர்கள். அவர்களை கவனிக்கவும், கனிவுடனும், மரியாதையுடனும் பழகவும் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் அறியாமையை மதிக்க நாம் கற்க வேண்டும். 'நீங்கள் இன்னும் வளரவேண்டும்; பாருங்கள், நாங்கள் சொல்வதை கேளுங்கள்' என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்லும்போது குழந்தைகள் நாம் ஒன்றுக்கும் பயனில்லை, நாம் எப்போது வளர்வோம் என்கிற ஏக்கத்தை நீங்களே வளர்க்காதீர்கள்
சந்தனமுல்லை:
ஈழத்திரைப்படத்தின் திரை விமர்சனம். தமிழினம் சபிக்கப்பட்ட இனமா என்ற கேள்வி மனதை அறுத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிட முயற்சி செய்தால் நலம்.
ஆடுமாடு:
தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கும் இக்காலகட்டத்தில் அது குறித்த வரலாறு, அதற்கான ஆதாரங்கள் பற்றி விளக்கமாக, ஆவணமாக அறிந்திருந்தல் அவசியம். நமக்கான பண்பாட்டுக்கூறுகள், செம்மொழிக்கான வரையறை என்பது என்ன, நம்மண்ணுக்கும் நமக்குமான மரபுகளை கொண்ட மொழியாக தமிழ் எப்படியானது போன்ற விஷயங்களை தெரிந்திருப்பது நமக்கான அறியாமையை விலக செய்யும். கல்வியாளர்களால் அல்லது புலமை வாய்ந்தவர்களால் பேசப்பட்டு வந்த இவ்விஷயம் பற்றி விரிவான ஆய்வை வழங்கியுள்ளார் முனைவர் நா. கணேசன்.
படித்த நாவல், கதைகளை நம்மோடு புதைத்துக்கொள்ளாமல் அதுகுறித்தான தனது மன ஓட்டங்களை, பாதித்த விஷயத்தை தோழமையோடு பகிர்ந்துகொள்வது அடுத்த ஆக்கத்துக்கான, அல்லது ஆரோக்கியமான விவாதத்துக்கான பாதையாக இருக்கும். குறைந்தபட்சம் கதைசொல்லியின் சிந்தனைக்கும் நம் சிந்தனைக்குமான தொடர்புகளை அறிவதற்காகக்கூட இதை பயன்படுத்தலாம். அப்படி, தாம் படித்த நாவல், கதைகளின் கதை மாந்தர்கள் பற்றி தொடர்ந்து எழுதிவருகிறார் பேராசிரியர் அ.ராமசாமி.
ஒரு பதிவில், தோப்பில் முகமது மீரானின், 'அஞ்சுவண்ணம் தெரு' பற்றி எழுதும் போது, இப்படி குறிப்பிடுகிறார்:
''பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தி விட வேண்டும் என்ற விருப்பம் காரணமாக வட்டார மொழிக்குத் தரும் அதிக முக்கியத்துவத்தால் மீரானின் எழுத்துக்கள் எப்போதும் வாசிப்பு வேகத்தை மட்டுப் படுத்தி தடைகளை எழுப்பும் இயல்பு கொண்டவை''
படைப்பின் ஆழத்தை அதிகரிக்க, வட்டார வழக்கு என்பது முக்கியமானதாகப் படுகிறது. ஒரு முறை கி.ரா, 'வட்டார வழக்கிலான கட்டுரை' என்றதற்கு, ' மொழி, பேச்சு வழக்கை தாங்கி வந்த பிறகு அது கட்டுரையாகாது. கட்டுரையின் இடையில் இடம்பெற்றாலும அதன் வடிவம் கதையாகவே மாறிவிடுகிறது' என்றார்.
இந்த அடிப்படையில் கொள்ளாவிட்டால் கூட, மீரானின் படைப்புகள் இந்த வழக்குச் சொற்களிற்காகவே அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதுகிறேன்.
வடகரைவேலன்:
சென்ற புதன் மணமாலை சூடிய அருமைத் தம்பி யாத்ராவின் கவிதை ஒன்று ஊமைப் ப்ரியம். மேம்போக்காகப் படித்தால் ஒரு ஸ்டிக்கர் பொட்டை வைத்து எழுதியதென்றாலும் பல்வேறு படிமங்களைத் தருகிறது இக்கவிதை. இதேபோல யாத்ரா எழுதிய தரை என்ற கவிதையும் பிரமாதமான ஒன்று
சிறந்த நடிப்பிற்கு இலக்கணமாகத் திகழும் மோகன்லாலும், சிறந்த திரைப்பட இயக்குனருமான பிளஸ்ஸியும் சேர்ந்து கொடுத்த சிறந்த படமான தன்மத்ராவிற்குப் பின் இந்த இணையின் மீண்டுமொரு படைப்பு பிரம்மரம். மலையாளத் திரைப்படங்கள் குறித்த நல்ல பார்வையுடன் அறிமுகம் செய்துவரும் நாஞ்சில் பிரதாப்பின் பதிவு .
Rajalakshmi:
வித்யாவின் ரத்தக்கறை என்னை கவர்ந்த ஒரு பதிவு. மிகவும் ரசித்தேன். எப்போதும் எழுதும் காமடியில் இருந்து விலகி விட்டாரோ என்று என்னை ஒரு நொடி யோசிக்க வைத்து விட்டார்.
I promise என்று ஆதி அவர்கள் சொல்லி அதை இராகவன் நைஜிரியா மற்றும் வெண்பூ அவர்களும் வழி மொழிய, படிக்கும் அனைவரும் வழி மொழிந்தால் நன்றாக இருக்கும் என என்னை நினைக்க வைத்த பதிவு இது.
ராம்ஜி:
பெண்ணினம் இருக்கும் திசை நோக்கி…
கோனார் நோட்ஸ் – யார் இந்தக் கோனார்
(பதிவைப் பற்றி குறிப்புகளை பதிவர் ராம்ஜி தரவில்லை)
மாதவராஜ்:
பழையவை தொந்தரவாய் இருப்பினும், அதன் நினைவுகள் சுகமானவை என்னும் அகவிதைகளின் சாலை படிக்க வேண்டிய கவிதை. இதுபோன்ற பொருளில் ஏற்கனவே எழுதப்பட்டு இருப்பினும் இன்னும் வார்த்தைகளை செறிவாக்கியிருந்தால் மேலும் நன்றாக வந்திருக்கும் எனத் தோன்றியது.
ராகவனின் பூனைக்கு அவனென்று பெயர்.. என்னும் கவிதை ரசித்து ஒரு கள்ளப்புன்னகை பூக்க வைக்கிறது.
totoவின் சற்றுமுன், வியாழக்கிழமை வேட்டை இரண்டுமே குறிப்பிட வேண்டியவை. ரசிக்க முடிகிறது. கவிதையின் தளத்துக்குச் செல்ல இன்னும் எதோ கவிதை வேண்டுவது போல் இருக்கிறது.
வண்ணத்துப்பூச்சியாரின் The Pope's Toilet திரைப்பட விமர்சனம் முக்கியமான பதிவு. அவரது வார்த்தைகளிலேயே:
ஊடகங்களின் அதீத கற்பனையும் விளம்பரமும் ஒரு ஊரின் வாழ்வாதாரத்தையே சூறையாடி விட்டது. பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பொறுப்பற்ற விளம்பர மோகத்தால் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். இதற்கு யார் பொறுப்பாக முடியும் என்ற கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.
அய்யனாரின் கடினத்திலிருந்து நீர்மைக்கு என்னும் இந்தப் பதிவு, நவீன வாழ்வில் தன் அடையாளத்தையும், இருப்பையும் காண எத்தனிப்பதோடு, தனது நான் பற்றிய புரிதலுக்கு இழுத்துச் செல்லும் ஒரு மனிதனின் சிந்தனைக் குறிப்புகள். அவசியம் படிக்கலாம்.
லாவண்யாவின் உறங்க மறுக்கும் உரையாடல்கள் அருமையான கவிதை.
வேல்கண்னனின் அவரைப் பற்றி நல்ல சொற்சித்திரம்.
பதிவர் நேசமித்ரனோடு கவிதைகள் குறித்து உரையாடலை பதிவாகி இருக்கிறார் கார்த்திகை பாண்டியன். உரையாடல் ஆரம்பிக்கும் முன்னாலேயே நின்று போனது போல் இருக்கிறது. மேலும் இதுகுறித்து பேசுவதற்கு நிறைய இருப்பதை உணர முடிகிறது.
நண்பர்கள் இந்தப் பதிவுகள் குறித்த விமர்சனங்களை, கருத்துக்களை இங்கே பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். பிடித்தமான பதிவுகளை இந்த மெயில்களுக்கு அனுப்பித் தெரிவிக்கலாம்.