நண்பர்களுக்கு வணக்கம்.
வலைப்பக்கங்களில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்குமான உரையாடல், அவரவர் வலைப்பக்கங்களில் மட்டுமே நிகழந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு பதிவரின், ஒரு பதிவைப்பற்றியதாக அந்தப் பின்னூட்டங்கள் இருக்கின்றன. பலசமயங்களில் அவை ஒப்புக்கோ அல்லது மேம்போக்காகவே இருப்பதையும் காண முடிகிறது. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எழுதப்படும் பல முக்கியப் பதிவுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவர்களது வலைப்பக்கங்கள் அடையாளமற்றுப் போகின்றன.
பதிவுகளைப் பற்றி, வலைப்பக்கங்களைப் பற்றி உரையாடும், ஓரளவுக்கு உயிரோட்டமுள்ள ஒரு பொதுவெளி வேண்டும் என யோசித்துக் கிடந்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இது. இங்கு யாரும் யாருக்கும் ஓட்டுகள் போட வேண்டியதில்லை. அவரவர்கள் படித்தது, அதில் பிடித்தது, புரிந்தது, புரியாதது என யாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். விவாதிக்கலாம். அப்படி ஒரு ஏற்பாட்டோடும், நோக்கத்தோடும்தான் இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த ‘வாடாத பக்கங்களின்’ ஒவ்வொரு நாளின் பதிவிலும்-
வலைப்பக்கங்களில் முந்தின சில நாட்களில் படித்தது, அவைகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்து அன்றைய உரையாடலை ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும். பதிவுகளில் வந்த நல்ல, ஆரோக்கியமான பின்னூட்டங்கள் பற்றியும்கூட அவர்கள் தெரிவிக்கலாம். மற்றவர்கள், அது குறித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அல்லது தாங்கள் வாசித்ததையும், அதில் பிடித்தமானவைகளையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.
இங்கு பதிவும், பின்னூட்டங்களும் சம மரியாதையும், அடையாளமும் கொண்டவை என்னும் புரிதல் வேண்டும்.
மொத்தத்தில்- நல்ல, முக்கியமான பதிவுகள் அடையாளம் காணப்படும். அவை வாடாத பக்கங்களாக நிலைக்கவும் செய்யும். ஒரு கருத்துக்கூடமாகவும் இருக்கும். ஒரு reference போலவும் இந்த வலைப்பூ உருப்பெறும்.
இந்த முயற்சியை மேலும் செழுமைப்படுத்தும், வளர்த்தெடுக்கும் சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்.
இந்த வலைப்பூவுக்கு இன்னொரு Author ஆக வடகரைவேலன் அவர்கள் இருக்கச் சம்மதித்து உள்ளார். அவருக்கு நன்றி.
யாரும், தங்கள் விருப்பங்களைப் பதிவாக தெரிவிக்க முன்வராவிட்டால் நானே அக்காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடிய அபாயமும் உண்டு. அது ஆரோக்கியமாகவும் இருக்காது. அதைத் தவிர்ப்பது உங்கள் கையில்!
இந்த வலைப்பூவை வாடாமல் இருக்கச் செய்வதும் உங்கள் கையில்.
ஆரம்பிப்போம்!
_____________________________________________________________
17.2.2010 அன்று நான் படித்தவை:
- சில பாராட்டுகள் – ஆதிமூலகிருஷ்ணன்
- Outsourced - திரைவிமர்சனம் - நிலா ரசிகன்
- Alternative Schools 'n' Mainstream Schools – சந்தனமுல்லை
- இவனே திரையிடும் இவன் படம் - பா.ராஜாராம்
- கேபிள் சங்கரின் சிறுகதைத் தொகுப்பு - T.V.ராதாகிருஷணன்
- தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள் – வினவு
- டாக்டர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2 – தீபா
- வீடென்று எதனை சொல்வீர்... – ராகவன்
- கிளிஞ்சல்கள் பறக்கின்றன... - கார்த்திகா வாசுதேவன்
- பகிர்தல் (17.2.2020) - ஈரோடு கதிர்
- எல்லைகள் – அனுஜன்யா
- தைப்பூசமும்... ஆரெம்கேவியும்.. – அமைதிச்சாரல்
- மனிதம் – ரிஷபன்
- குரு - என்.விநாயகப் பெருமாள்
- சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை" – லேகா
- அன்பெனும் அதி பயங்கர ஆயுதம் – பரிசல்காரன்
- பரிசலின் புத்தகம்..ஒரு பறவையின் கண்ணோட்டத்தில் - T.V.ராதாகிருஷணன்
என் கருத்துக்கள்:
- நிலாரசிகனின் ‘Outsourced’ படம் பற்றிய விமர்சனத்தை விட, படத்திற்கான அறிமுகம், சுவையானது.
- சந்தனமுல்லை அவர்களின் பதிவு இன்றைய கல்வி குறித்த மாற்றுச் சிந்தனைகளை ஆராய்கிறது. மீறமுடியாத நிர்ப்பந்தங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
- காத்திகா வாசுதேவன் அவர்கள் ‘கிளிஞ்சல்கள் பறக்கின்றன’ என வலைப்பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பு குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னூட்டத்தில் அகநாழிகை, பாராட்டுக்களோடு, அத்தொகுப்பில் தான் காணும் குறையையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
- ரிஷபனின், ‘மனிதம்’ அதிர்வுகளை ஏற்படுத்தும் சிறுகதை.
- அன்பை ‘அதி பயங்கர ஆயுதம்’ என பரிசல்காரன் சொல்லி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. (தலைப்பு மட்டும்தான் பிடிக்கவில்லையென்று சொன்னேன்)
- டாகடர் ருத்ரன் அவர்களுடனான பேட்டியில், பேட்டியின் கேள்விகள் மேலும் ஆழமான விளக்கங்களைக் கோருவதாக இல்லை. இருப்பினும் தீபா, முல்லை அவர்களின் முக்கிய முயற்சி இது.
- வினவின் பதிவு ‘தெலுங்கானா’ குறித்த வரலாற்றுப் பின்னணியை அவர்களுக்கே உரித்த தொனியில் விளக்கி இருக்கிறது.
- அனுஜன்யாவின் எல்லைகள், மீன் தொட்டிக்குள்ளிருக்கும் மீன் குஞ்சுகளைப் பற்றிப் பேசாமல், மனிதனைப் பற்றிப் பேசுவதாக எனக்குப் பட்டது.
- ராகவனின் கவிதை முக்கியமானது. பலரால் இவரது கவிதைகள் கவனிப்பு பெறாமல் போகின்றன என்பது எனது ஆதங்கங்களில் ஒன்று. வீட்டுச்சுவர்களைப் பற்றிய கடைசி இரண்டு பாராக்களும் நம்மை மீளமுடியாமல் செய்கின்றன. அதன் துடிப்புகளை நீங்கள் உணர முடியும்.
- பா.ராவின் கவிதைக்கு வந்த பின்னூட்டங்களில் வெளிப்படையாக தீபாவும், முரளிகுமார் பத்மநாபன் அவர்களும் புரியவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். தலைப்போடு சேர்த்துப் படிக்கும்போது புரியமுடியும். கனவிலிருந்து நனவுக்கு மீளும், மீண்டு புதிதாய்த் தொடங்கும் சொற்சித்திரமாக எனக்குத் தோன்றியது.
- சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை" படித்திருக்கவில்லை. லேகாவின் புத்தக விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது. விமர்சனங்களை இன்னும் விரிவாக எழுதலாமே என எப்போதும் ஒரு கருத்து எனக்கு உண்டு.
- விநாயக முருகனின் ‘குரு’ படித்து முடிக்கவும் புன்னகை தோன்றும்.
தங்களுக்கு விருப்பமான பதிவுகளை பின்ன்னூட்டமாகவும் தெரியப்படுத்தலாம். அல்லது கீழ்க்கண்ட மெயில்களுக்கு தெரியப்படுத்தினால், அடுத்த நாள் பதிவில் குறிப்பிடலாம்.