Headlines News :

வாடாத பக்கங்கள் -4

Written By மாதவராஜ் on Sunday, February 21, 2010 | 8:24 PM

வாடாத பக்கங்கள் ஒரு திரட்டியாக செயல்படுகிறதோ என்னும் சந்தேகம் வந்திருக்கலாம், அதனால்தான் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் அதிகமாக  நிகழாமல் இருக்கலாம்’ என்பதாக குப்பன் யாஹூ அவர்கள் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த வலைப்பக்கம் ஒரு திரட்டி போல இருந்துவிடக்கூடாது என்பதுதான் நமது விருப்பமும்.

 

திரட்டிகள், எழுதப்படுகிற அனைத்துப் பதிவுகளையும் உடனுக்குடன் திரட்டுகின்றன. வாடாத பக்கங்கள் அதுவல்ல. அதற்குமல்ல. தாங்கள் படித்த, ரசித்த பதிவுகளை இங்கே நண்பர்கள் அறிமுகப்படுத்த்லாம். ஏன் பிடித்திருக்கிறது எனச் சொல்லலாம். அது குறித்து கருத்துப் பரிமாற்றங்களை பின்னூட்டங்களில் தெரியப்படுத்தலாம். ஒரு உரையாடல்களுக்கான் வெளியை உருவாக்கலாம். இதுதான் நமது நோக்கம். சரியாக இது நடைமுறைப்படுத்தப்பட்டால் திரட்டிக்கும், வாடாத பக்கங்களுக்குமான வித்தியாசங்களும் தெளிவாகும் என நம்புகிறேன்.

 

 

ப்படியொரு விவாதத்தை இங்கே விநாயக முருகன் துவங்கி இருக்கிறார். முதலில் அதைப் பார்ப்போம்.

 

விநாயக முருகன்:

 

வா.மு.கோமுவின் பு‌திய நாவல் பற்றி மாதவராஜின் ஒரு விமர்சனம் படித்தேன். புஷ்பா தங்கதுரையை ‌விட மோசம் எ‌ன்று சொன்னது கொஞ்சம் ஓவர். இன்னும் கொஞ்சம் இந்த நாவல் பற்றி ஆழ்ந்து விமர்சனக் கருத்துகளை முன் வைத்திருக்கலாம், நாவல் மோசமாகவே இருந்தாலும் கூட. உதாரணமாக, சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் நாவலின் முதல்பகுதி 1997-ல் நடக்கிறதா அல்லது 1988-ல் நடக்கிறதா எ‌ன்று எனக்கு குழப்பம். நாவல் ஆசிரியரே அவசரத்தில் குழம்பியிருக்கிறார். காதலுக்கு மரியாதை படம் பற்றி தகவல் வரு‌கிறது (1997) பிறகு பள்ளி மாணவர்கள் தாங்கள் பார்த்த விக்ரம் படம் (1988) பற்றியும் வசனம் எழுதிய சுஜாதா பற்றியும் பாலகுமாரன் நாவல்கள் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில் 1997-ல் பள்ளி மாணவர்கள் எல்லாரும் கேபிள் டி.வி இலக்கியம் பக்கம் வ‌ந்து விட்டார்கள். பாலகுமாரன் ஆன்மீக நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார். 
இ‌து போன்ற கவனக்குறைகளை சுட்டிக்காட்டியிருக்கலாம்

 

 

ண்பர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளை தந்திருக்கின்றனர் அவைகளை பார்ப்போம்.

 

பா.ராஜாராம்:

 

இன்று வாசித்த சரவணன் - சாரதியின் புணரும் காலம் என்னும் இந்த கவிதை பிடிச்சிருந்தது. சில கவிதைகளை சிறு குறிப்பு கூட கொடுக்காமல் அனுபவிக்க விட்டுக்கொடுக்க வேணும்.அப்படி,குறிப்பின்றி விடுகிறேன்.

 

 

ஜெயமார்த்தாண்டன்:

சென்ற வாரத்தில் என்னை கவர்ந்த பதிவுகள் இவை. சொல்வனம் இணைய இதழில் ஆர்.எஸ்.நாராயனண் எழுதிய “தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர் .  ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்  என்ற இயற்கைவளத்தையும் ,மண்னையும் நேசித்த ஒரு அமெரிக்க வேளாணமை விஞ்ஞானியின் வாழ்வையும் அவர் வாழ்வின் சாரத்தையும் முன்வைக்கிறது.

ஹிரோஷிமா,நாகசாகியின் அழிவிலிருந்து தப்பியவர்களிடம் நேரடியாக பேட்டிக்கண்டு தொகுத்திருக்கும் ராபர்ட் ஜங்க் என்பவரின் Children of Ashes என்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறது தமிழச்சியின் இந்த பதிவு


சமீபத்தில் நான் படித்த நல்ல அங்கத சிறுகதை சுரேகாவின் “எனக்கு ஏன் இந்த தண்டனை? ”அவரின் நடையும்,சமகால அரசியலுடன் நாம் இந்த சிறுகதையை பொருத்திப்பார்க்க முடிவதும் இந்த கதையை முக்கியமாக்கிவிடுகிறது.


மாயுரம் வேதநாயகம் பிள்ளையைப்பற்றிய அரிய தகவல்களை தருகிறது
முனைவர் நா.இளங்கோவின் இந்த பதிவு.


ஜோதி:

 

 

இன்று படித்த அகிலனின் "My name is Agiilan and I am not a terrorist" மை நேம் இஸ்  கான் திரைப்படத்துடன் ஒத்துப்போதும் தஙகளது வாழ்க்கையின்  சங்கடங்களை தெரிவிக்கிறார். உண்மையான இந்த விடயங்களை படிக்கும் பொழுது மனது கனக்கச்செய்கிறது

 

 

லாவண்யா: 

 

உமாகதிர் அவர்களில் பிரிவுதுயர் கவிதை அருமையாக இருந்தது.

//வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன// அழகான படிமம் இது.

மண்குதிரையின் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது கவிதை பிடித்திருந்தது

//ஒழுகும் வெயிலைப் பருகுகிறேன்//  இது வித்தியாசமான வரிகளாக பட்டது.

துரான் குணாவின் ஆத்மாநாம் இருந்த மருத்துவமனை கவிதை பிடித்திருந்தது

//நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
சூரியன் அணைந்துகொண்டிருக்கிறது//  கவர்ந்த வரிகள்

 

 

மா.கார்த்திகைப் பாண்டியன்: 

 

தமிழின் இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே இயங்கி வருகிறது "அழியாச் சுடர்கள்" என்ற வலைத்தளம். உபபாண்டவம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பேட்டி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. புத்தகத்தின் மீதான எதிர்வினைகளும், அதற்கு எஸ்ரா கொடுக்கும் விளக்கங்களும் மிக முக்கியமானவை. மகாபாரதத்தோடு தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தகவல்களும், மகாபாரதம் எப்படி ஒவ்வொருவரின் கண்ணோட்டங்களிலும் வித்தியாசப்படுகிறது என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.  கன்னித்தன்மை குறித்த எஸ்ராவின் கருத்தும் கவனத்தை ஈர்க்கிறது.

 

"சாங் ஆப் ஸ்பாரோஸ் " என்கிற மஜீத் மஜிதியின் இரானிய படம் பற்றிய முரளிகுமார் பத்மநாபனின் பதிவும் அருமை.ராம்ஜி யாஹூ:

 

இன்று நான் ஜ்யோவ்ராம் சுந்தரின் பெயர்களைப் பற்றிய பதிவு படித்தேன். அவரது வலைப்பக்கத்தில் கண்ட இந்த ஆங்கில இடுகை மிகவும் சுவையாக இருந்தது.

எனது கவனம் அறிவன் மற்றும் முத்துகுமாருக்கு நடந்த உரையாடல், கருத்து வேறுபாடு அல்ல: 

சிறு குழந்தைகள் முன் பெரியவர்கள் முத்தமிடலாமா


கதிர்:


ஈழத்துத் தமிழை மிகச்சிறந்த அவதானிப்போடும், காதல் மேல் இருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்திய நண்பர் பழமைபேசியின் யாழினி இடுகை. படித்தவுடன் யாழினி கதாபாத்திரம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. வாழ்க அந்தப் பெண் என்று மனது நெகிழ்ந்தது.
காதலுக்கு காதலைவிட வேறு எதை பரிசாக கொடுக்க முடியும்.புனைவு போல் தோன்றினாலும், அந்த நிகழ்வு உண்மை என்று உணர்ந்த போது, நெகிழ்ந்து போனது உண்மை.

 

பாபு:

நேற்று படித்த ஒரு கவிதை - நாட்டின் பேராண்மையும்  ஈனவெங்காயமும்..!!! இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் அறச்சீற்றம்... பாடம் சம்பந்தமட்டுமல்லாமல் எழுதுவதற்கும், ஆசிரியர்  மாணவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவி,  ஜெ.நிவேதாக்கு வாழ்த்துக்கள்!

 

காதியைப் பற்றி எழுத்தாளர் பா.ராகவன் (பாரா) மதனசுந்தர ஜவ்வாது பாகவதர் மிகவும் சுவாரிசியமானது. எல்லாமே வியாபாரமான இந்த உலகில் அரசாங்கம் காதிக்கும் 'கொஞ்சமே கொஞ்சம்' விளம்பரம் செய்தால் நல்லா இருக்கும்!

L.X.ஜெரோம்  சமீபத்தில் எழுதின 'VALENTINE Hijacked… இடம் மாறும் மையமும் ஓரங்களும்...' அருமையான பகிர்வு!

 

 

சந்தனமுல்லை:

பூங்குழலியின் என்னவென்று சொல்வது ? இடுகையை வாசித்தேன்.! எனக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.ஆனால், அனைவரும் வாசிக்க வேண்டிய இடுகை என்று மட்டும் தோன்றுகிறது!

 

ண்பர்கள் இந்தப் பதிவுகள் குறித்த விமர்சனங்களை, கருத்துக்களை  இங்கே பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். பிடித்தமான பதிவுகளை இந்த மெயில்களுக்கு அனுப்பித் தெரிவிக்கலாம்.

jothi.mraj@gmail.com

vadakaraivelan@gmail.com

Share this article :

18 உரையாடல்கள்:

Anonymous said...

வா மு கோமுவின் நாவல் மிக மோசமாக எழுதப்பட்ட ஒன்று. அதை ஏன் விநாயகமுருகன் இவ்வளவு தூக்கிப் பிடிக்கிறார் எனத் தெரியவில்லை.

முதல் பகுதி விடலைகளின் காதல் என்றாலும் அது எழுதப்பட்டவிதம் சரியில்லை.ஒன்று விடலைகளின் உலகத்தை அவரகள் மொழியில் சொல்லியிருக்கலாம். அல்லது ஆசிரியரின் பக்குவப்பட மனநிலையில் சொல்லியிருக்கலாம். நாவல் இரண்டிற்கு இடையில் ஜல்லி அடிக்கிறது.

இரண்டாம் பகுதி அவரது ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு முயற்சியே தவிர வேறெதுவும் இல்லை. குறிப்பாக அவர் மொபைல் போனில் நடத்தும் உரையாடலகள் எல்லாம் ஸ்கேண்டல்களாக ஏற்கனவே நெட்டில் உலாவருவதுதான். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மானே தேனே சேர்த்து எழுதியிருக்கிறார். இவ்வளவு கற்பனை வறட்சியா?

மேலும் அவரும் வால்பையனும் அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் நெட்டிலிருந்து உருவப்பட்டதுதான்.

காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நெட்டில் இருந்து தரவிரக்கம் செய்து கொடுக்கும் கள்ளத்தனம சரியான அணுகுமுறையா?

நாவல் முதல் பகுதியுடன் முற்றுப் பெறுகிறது. இரண்டாம் பகுதி தேவையில்லாத பிற்சேர்க்கை. அதிலும் பக்கத்தை நிரப்ப என்ன என்ன எழுத முடியுமோ அதை எழுதியிருக்கிறார். பிரதான நோக்கம் காமத்தை எழுதுவது மட்டுமேயன்றி வேறில்லை.

அவரது கள்ளி நாவலை வாசித்திருக்கிறேன். அதில் வரும் காமம்கூட கதையோட்டத்தில் வரும் காமமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாவலின் பிற்பகுதி அப்பட்டமான சரோஜாதேவி வகை.

இது போன்ற எழுத்துக்களைத் தூக்கிப் பிடிக்கும் மனுஷ்யபுத்திரனின் இலக்கியச் சேவைக்கு யாராவது ஒரு விருதை ஏற்படுத்திக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

அவர் வாழும் பகுதியில் இருக்கும் மக்களிடம் கொட்டிக் கிடக்கும் கதைகள் ஏராளம். அவற்றை ஒதுக்கி விட்டு காமத்தைக் கையிலெடுத்து இருப்பது வருத்தமே.

திருப்பூர் பனியன் கம்பெனிகளில் நடக்காததையா எழுதிவிட்டார்? எனக் கேட்கலாம். என்றாலும் திருப்பூரில் இது ஒரு பகுதிதானே தவிர இது மட்டுமே திருப்பூர் அல்ல.

உங்களுக்கு எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை நாவலைப் பரிந்துரைக்கிறேன். நான்கு வாலிபர்கள் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்கும் நாவல் அவர்களின் பதின்ம வயது, வாலிபம் என பயணிக்கும். ஒவ்வொரு புள்ளியிலும் அவர்களின் அனுபவம் நாவலாக்கபட்டிருக்கிறது. தேவையான இடங்களில் தவிர்க்கமுடியாத காமத்தையும் கதையாக்கி இருக்கிறார்.

நாவல் முடிந்ததும் காற்றில் திசை எங்கும் தூக்கி வீசி எறியப்பட அவர்களின் வாழ்வின் அவலம்தான் தொக்கி நிற்கிறதேயன்றி காமமல்ல.
அது அப்பட்டமான திருப்பூர் நாவல்.

வா மூ கோமூ காமத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்பப் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்.

சாருவின் வாரிசு என்பதை நிறுவ முயற்சிக்கிறாரோ?

தமிழ் உதயம் said...

படிக்காமல் விட்டு போன, சில தவிர்க்க கூடாத வலைப்பூக்களுக்கு, கையை பிடித்து அழைத்து செல்லும் அருமையான வேலையை வாடாத பக்கங்கள் செய்கிறது. நன்றி...

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

வணக்கம் வடகரை வேலன்.
நான் நாவலை தூக்கிப் பிடிக்கவில்லை. அதே நேரம் குப்பை எ‌ன்று தூக்கி வீச வேண்டாம் எ‌ன்று கூற வருகின்றேன். குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் காலம் இ‌து. குப்பைத்தொட்டியில் இருந்து உங்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை கிடைக்கலாம். குப்பைத்தொட்டியில் இருந்து ‌சிலருக்கு மூன்று வேளைக்கு போதுமான உணவு கிடைக்கலாம். வருமான வரி ரெய்டுக்கு பயந்து யாராவது அரசியல்வாதி வீசிவிட்டுபோன பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள் கிடைக்கலாம். நண்பனின் மனைவியை புணர்ந்தவன் வீசிசென்ற காண்டம் கிடைக்கலாம். சிலநாடுகளில் ஒரு அரசாங்கமே குப்பைத்தொட்டியில் இருந்துக்கொண்டு இயங்குகிறது. குப்பைத்தொட்டியில் இருந்தும் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

குப்பை எ‌ன்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து நாம் இந்த நாவலை அணுகாமல் வேறு கோணத்தில் அணுகலாம்.

நாவலின் முத‌ல் பாகம் ஓ.கே. இங்கு ஜல்லியடிப்பதாக தெரியவில்லை. திடீர் திடீரென ‌சில இடங்களில் கதாபாத்திரங்களுக்கு பாலகுமாரன் நாவல் போல ஞானோதயம் பிறந்து வாழ்க்கையை கவனிக்கிறார்கள். உதாரணம் சக்தி பெண்களை பற்றி பேசும் இடம்


எனக்கு என்னவோ டி.வி சீரியல்களை ‌விட இந்த நாவல் ஆபாசமாக தெரியவில்லை

யாஹூராம்ஜி said...

இந்த செய்தி இங்கு உள்ள பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது:

இருந்தும் மாதவராஜ், காமராஜ், ராகவன், வடகரை வேலன் போன்றோரின் கருத்துக்கள் அறிய ஆசை:

இந்திய கல்வி சந்தையில் அந்நிய தேசத்து பல்கலை கழகங்களை கடை விரிக்க அனுமதிக்கலாமா. இதனால் ஏற்படும் நன்மை தீமை எவை:
the government is endeavouring to bring forward an appropriate legislation for facilitating the participation of globally renowned and quality academic institutions in our higher education sector, and for bringing in foreign education providers for vocational training and skill development," Patil said in her address to a joint sitting of both houses of parliament on the opening day of the budget session.

Human Resource Development Minister Kapil Sibal has mooted the idea. Now foreign varsities are likely to enter the Indian educational scene by opening campuses and offering joint degrees with Indian institutes.

Anonymous said...

விநாயக முருகன்,

உங்கள் பின்ன்னூட்டத்தின் முதல்பாரா அபாரமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சொல்லும் கருத்தில் முரண் இருக்கிறது. குப்பைத் தொட்டி எனத் தெரிந்தபின்னும் அதைக் கிளறுவானேன்.

மேலும் நான், நாவலைக் குப்பை எனச் சொல்லவில்லை. ஆனால் மோசமான ஆக்கம் என்பதுதான் என் வாதம். நான் இதைப் படிக்காமலே புறந்தளளவில்லை.
நான் பதிவு செய்திருப்பது என் ஏமாற்றத்தைத்தான். அதே பகுதியைச் சேர்ந்தவர்தான் பெருமாள் முருகன், ஆனால் அவரது எழுத்துக்களில் அந்த வட்டார மக்களின் வாழக்கைப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது பாருங்கள். ஏறு வெயில், கங்கணம் இரண்டும் அற்புதமான நாவல்கள்.

நல்ல இலக்கியம் தான் படைக்கப் பட்ட காலத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தின் அல்லது பகுதியின் வாழ்க்கை முறை அந்த எழுத்தில் பதிவாக்கபட வேண்டும்.

ஆனால் இவர் காட்சிப்படுத்தும் விதமாகத்தான் எல்லார் வாழக்கையும் இருக்கிறதா? ஒரு ஊரில் இருக்கும் பென்கள் அனைவரும் சோரம் போனவர்களாக எழுதுகிறார். நிதர்சனம் அப்படியா?

நாவலின் இரண்டாம் பகுதியை என்ன பெயர் சொல்லி அழைக்க? நாவலா? சுய சரிதையா? கட்டுடைத்தலா? பி ந எழுத்தா? எழுத்தாளன் சுதந்திரமாகப் படைக்க வேண்டியதுதான் ஆனால் இப்படி அல்ல.

தரவிறக்கம் செய்து பக்கங்களை நிரப்ப வேண்டிய அவசியம் என்ன? முதல் பகுதியை எழுதி முற்றும் போட வேண்டியதுதானே? நாவலின் முன்னுரையில் வரும் வசனமே நெட்டில் உலவும் ஒரு காணொளியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டதுதான்.

அவர் எத்தனை பேரை... எப்படி எல்லாம்... எனப் பறை சாற்றுவதை நாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டுமா?

தம்பி செல்வேந்திரன் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.

”நியூஸ் பிரிண்டில் அடித்தால் மஞ்சள் இலக்கியம், மேப்லித்தோ பேப்பரில் அடித்தால் பின் நவீனத்துவ இலக்கியம்”

Mohan said...

// திடீர் திடீரென ‌சில இடங்களில் கதாபாத்திரங்களுக்கு பாலகுமாரன் நாவல் போல ஞானோதயம் பிறந்து வாழ்க்கையை கவனிக்கிறார்கள். உதாரணம் சக்தி பெண்களை பற்றி பேசும் இடம்//

இதற்குக் கார‌ணம் இந்த நாவலில் ச‌க்தி,பால‌குமார‌னின் நாவ‌ல்க‌ளை விரும்பிப் ப‌டிப்ப‌து போல் காட்டியிருப்பதாகக் கூட இருக்கலாம்.

மாதவராஜ் said...

விநாயக முருகன்!

உங்களது கருத்தின் முதல் பாராவை என்னால் கொஞ்சம் கூட ரசிக்க முடியவில்லை. குப்பைத்தொட்டி குறித்து தாங்கள் கொடுத்திருக்கிற விளக்கம் அல்லது வியாக்கியானம் ஒருவித மேதாவிலாசத்தை காட்டுவதாக இருக்கிறதே தவிர அதில் வேறொன்றுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.இப்படி ஒவ்வொன்றின் குறித்தும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்களுக்கும் முடியும். எனக்கும் முடியும்.

அது ஒற்றைப் புள்ளியிலிருந்து பார்க்கிற பார்வையல்ல. ஒட்டு மொத்தமான பார்வை. தனுஷும், சிம்புவும் நடிக்கிற விடலைத்தனமான சினிமாக்காட்சிகள் நிறைந்தது தவிர வேறெதை நீங்கள் அதில் பன்முகத்தன்மையோடு கண்டுவிட்டீர்கள் என்று சொல்லியிருக்கலாம்.

சதா நேரமும் மனிதர்கள் உடல்குறித்த இச்சை அல்லது இம்சையோடு வாழ்வதாக வா.மு.கோமுவின் நாவல் போகிறது. தாங்க முடியாத அயற்சியாக இருக்கிறது.

பெண்குறியில் உள்ள முடியை ஷேவ் செய்திருக்க வேண்டுமா, வேண்டாமா என்கிற நக்கீர ஆராய்ச்சிகள் எல்லாம் மிக முக்கியந்தான் இலக்கியத்துக்கு, இல்லையா?


உங்கள் பதிவில் இந்த நாவலை ஜ்.நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலோடு ஒப்பிட்டெல்லாம் எழுதி இருக்கிறீர்கள். அந்த நாவல் எங்கே? இந்த நாவலா(?) எங்கே? குறத்தி முடுக்கு என்பது இந்த சமூகத்தின் இருட்டான இன்னொரு பகுதி. புதுமைப்பித்தனின் பல பொன்னகரங்கள் அங்கு இருக்கின்றன். கர்ப்பிணிப்பெண், ஒருவனின் ஆவேசப் புணர்ச்சியால் கருச்சிதைவு அடைவதும், பைத்தியம் பிடித்து கதறும் பெண்ணையும் நீங்கள்ஜீ.நாகராஜனின் எழுத்துக்களில் பார்க்க முடியும். அங்கு வாழும் மனிதர்களின் துயரமும் வலியும் எப்பேர்ப்பட்டது! அதில் மரண வேதனையோடு புன்னகைக்கும் காதலை, வாழ்வை நீங்கள் தரிசிக்கவில்லையா? அப்படி ஒரு இடத்தை இந்த வா.மு கோமுவின் நாவலில் சொல்லுங்கள் பார்ப்போம். மொத்த சமூகத்தையும் இருட்டுக்குள் விட்டு தடவிக்கொண்டு இருக்கிறது எழுத்தாளனின் விரல்கள்.

மன்னிக்கவும். இது நாவலே அல்ல. அருவருப்பான பல வார்த்தைகல் நிரம்பிய குப்பை.

கார்த்திகைப் பாண்டியன் said...

"ஆத்மாநாம் இருந்த மருத்துவமனை" மனதை அள்ளிக் கொள்கிறது..

பகிர்வுக்கு நன்றி லாவண்யா..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

"My name is Mugilan" மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பதிவு.. மதம் மற்றும் இனம் குறித்த அடையாளங்கள் எத்தனை பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி இருக்கிறார்.. ஒரு மதத்தை சார்ந்த மனிதர்கள் நடத்தும் கல்லூரியிலோ, பள்ளியிலோ படிக்கும் மற்ற மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டமான சூழல்களையும் நாம் கவனிக்க வேண்டும்.. ஏன் என்றால் அதை அனுபவித்தவன் நான்.. இதை கருத்தாக எடுத்துக் கொண்டாலும் சரி, விவாதமாக தொடர்ந்தாலும் சரி.. நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..

நீச்சல்காரன் said...

திரட்டிகள் செய்யும் வேலையைத்தான் இதுவும் செய்யுமென நினைத்தேன் ஆனால் வந்தபின்புதான் தெரிந்தது, இந்தப் பக்கம் வாசகர்கள் ரசித்த பதிவுகளின் தொகுப்பாகவுள்ளது
வாழ்த்துக்கள்

கண்ணகி said...

வாடாத பக்கங்கள் ஒரு நல்ல் விமர்சனக்களமாகவும்,அறிமுகக்களமாகவும் வாழ்த்துக்கள்...பிடித்த பக்கங்களுக்கு எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை. உதவுங்கள்...

அ.மு.செய்யது said...

இன்று காலை படிக்க நேர்ந்த பதிவர் புதுகை அப்துல்லாவின்
இப்பதிவு "ஒரு பூர்ஷ்வாவின் தன்னம்பிக்கையும், கம்யூனிஸ்ட்டின் கோழைத்தனமும்" பரபரப்பை கிளப்பியிருக்கிறது.இந்த ஒப்பீடு எந்த அளவில்
விமர்சனங்களை எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பே இவ்விடுகையின்
சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

மாதவராஜ் said...

தமிழ் உதயம்!
தொடர்ந்து வாருங்கள். பங்களிப்பும் தாருங்கள்.

மாதவராஜ் said...

யாஹூ ராம்ஜி!
நிச்சயமாக நீங்கள் குறிப்ப்ட்டுள்ள விஷயம் குறித்து வேறொரு இடத்தில் பேசுவோம்.

மாதவராஜ் said...

கார்த்திகைப் பாண்டியன்!
உங்களைப் போலவே "My name is Mugilan" குறித்து கருத்துக்களை எதிர்பார்த்தேன்.

மாதவராஜ் said...

நீச்சல்காரன்!
தொடர்ந்து வாருங்கள். பங்களிப்பும் தாருங்கள். இது நம் அனைவருக்குமான பக்கங்கள்.

மாதவராஜ் said...

கண்ணகி!

தங்களுக்கு பிடித்த பதிவுகளை அறிமுகம் செய்ய, பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ள இ-மெயில் முகவரிகளுக்கு, சிறு குறிப்போடு, லிங்க்கையும் இணைத்து அனுப்புங்கள். பதிவில் குறிப்பிடுகிறோம்.

மாதவராஜ் said...

அ.மு.செய்யது!
அந்தப் பதிவைப் படித்தேன். மிக மிக மேலோட்டமானது.

தாங்கள் பிடித்த பதிவுகளையோ, விவாதத்துக்கு உரிய பதிவுகளையோ,
jothi.mraj@gmail.com
vadakaraivelan@gmail.com என்ற முகவரிகளுக்கு மெயில் அனுப்புங்கள்.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள பதிவுகள் குறித்து தங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள்.

நன்றி.

your widget

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வாடாத பக்கங்கள் - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template